February 20, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். இதையடுத்து,அவர் திமுக தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இல்லத்துக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாளை தொடங்கவுள்ள கமலின் அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் தெரிவித்தார்.சுமார் 20 நிமிட சந்திப்பிற்கு பிறகு, நடிகர் கமல்ஹாசனும், சீமானும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சீமான்,
நடிகர் கமல்ஹாசன் என்னை சந்திக்க விரும்பினார். ஆனால் பண்பாடு கருதி மூத்தவரான அவரை நான் வந்து சந்தித்தேன்.மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார்.
அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய கொள்கைகள் சீமானுக்கு தெரியாது என்றும், சமூக மாற்றங்கள் ஏற்படாத காரணத்தால், தாங்கள் அரசியலுக்கு வருவதாகவும் கூறினார்.அ.தி.மு.க அரசை கடுமையாக எதிர்த்து வருவதால் அக்கட்சி நிர்வாகிகளை தான் சந்திக்கவில்லை என்றும் கமல் தெரிவித்தார்.
மேலும் ரஜினியும் கமலும் இணைந்தால்கூட 10 சதவீத வாக்குகள் வாங்க மாட்டார்கள் என்ற ராமதாஸ் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், தங்களுக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்.