August 9, 2018
தண்டோரா குழு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா அரசுக்கு ரூ.5 கோடி நிதி உதவி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தொடர் மழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணை திறந்து விடப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்யும் கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க ராணுவம் மற்றும் கப்பற்படை உதவியை கேரள அரசு நாடியுள்ளது. 3 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கடலோர காவல்படை குழுவினரும் ஏற்கனவே கேரளா வந்தடைந்தனர். மேலும் 6 கூடுதல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தமிழக அரசு ரூ.5 கோடி வெள்ள நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.5 கோடி வழங்கப்படும். கேரள அரசுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட தமிழக அரசு தயாராக இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.