July 16, 2018
தண்டோரா குழு
இந்தோனேஷியாவில் உறவினரை கடித்துக் குதறிய முதலையைப் பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை கிராமவாசிகள் கொன்று குவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது.அங்குள்ள சோராங் நகரில் உப்புநீர் மற்றும் நியூ கினியா வகை முதலைகளின் இனப்பெருக்கத்திற்காக பிரத்யேக பன்னை ஒன்று உள்ளது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால்,இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும்,தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர்,முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது,அந்த பண்ணையில் இருந்து வந்த முதலை ஓன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற போது மற்ற முதலைகளால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில்,சுகிட்டோவின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தது.இறுதிச் சடங்கை முடித்துவிட்டு,கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரண்டு கையில் கத்தி,கம்பு கூரிய ஆயுதங்களுடன் முதலைப்பண்ணைக்குள் புகுந்தனர்.முதலைப்பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் தடுத்தும் உள்ளே சென்ற கிராமவாசிகள்,சககிராமவாசி இறப்புக்கு காரணம் என கருதியதால் கண்களில் சிக்கிய முதலைகளை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து கொலை செய்தனர்.இதில் 300கும் மேற்பட்ட முதலைகள் உயிரிழந்தது.
இது குறித்து பண்ணை நிர்வாகத்தினர் சார்பில் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீஸார், முதலைகள் கொல்லப்பட்டு குவியலாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இது போன்று மீண்டும் ஒரு முறை நிகழாமல் இருக்க வேண்டுமென்றால்,முதலை பண்ணைகளை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை பன்னையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.