January 26, 2026
தண்டோரா குழு
கத்தாரில் நடைபெற்ற 41-வது ஆசிய-பசிபிக் அளவிலான ‘ஷெல் ஈக்கோ மாரத்தான் 2026’ (Shell Eco-Marathon) போட்டியில், குமரகுரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ‘டீம் ரீநியூ’ (Team ReNew) மாணவர் குழு மூன்றாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கத்தாரின் தோஹாவில் உள்ள லுசைல் சர்வதேச ஓடுதளத்தில் ஜனவரி 21 முதல் 25 வரை நடைபெற்ற இப்போட்டியில், ஹைட்ரஜன் பியூயல் செல் (Hydrogen Fuel Cell – Prototype) பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அணி என்ற பெருமையுடன் குமரகுரு மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கினர்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பல முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் போட்டியிட்டு, வகுப்பறையில் கற்ற தொழில்நுட்ப அறிவை, சர்வதேச தரத்திலான பந்தயக் களத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ‘நெட்-ஜீரோ’ (Net-zero) தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஹைட்ரஜன் வாகனத்தை வெற்றிகரமாக இயக்கி, நிலையான போக்குவரத்துத் துறையில் (Sustainable Mobility) இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை இவர்கள் உலக அரங்கில் பறைசாற்றியுள்ளனர்.
மிகக் குறைந்த எரிபொருளில் அதிக தூரம் பயணிக்கும் வாகனங்களை வடிவமைப்பதே ஷெல் ஈக்கோ மாரத்தான் போட்டியின் சவாலாகும். இதற்காக குமரகுரு வளாகத்தில் உள்ள ‘கேசிடி கேரேஜில்’ (KCT Garage) மாணவர்கள் சுமார் 10 மாதங்களாகத் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். மீன்கொத்திப் பறவையின் (Kingfisher) காற்றியக்கவியல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், போட்டியின் கடுமையான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை வெற்றிகரமாகக் கடந்து இந்தச் சாதனையை எட்டியுள்ளது.
பொறியியல் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக, இந்த வாகனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசால்ட் ஃபைபர் (Basalt Fibre) கலவைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் எடை வெறும் 45 கிலோவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 21 கிலோ குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேம்படுத்தப்பட்ட மோட்டார் அமைப்பு (BLDC Hub Motor) மற்றும் சிறந்த எரிசக்தி மேலாண்மை உத்திகளுடன் இயங்கிய இந்த வாகனம், போட்டியில் ஒரு கன மீட்டர் ஹைட்ரஜனுக்கு 277 கிலோமீட்டர் (277 km/m³) பயணிக்கும் செயல்திறனை வெளிப்படுத்தியது.
இந்தச் சாதனைப் படைத்த 14 பேர் கொண்ட மாணவர் குழுவிற்கு அஸ்வின் கார்த்திக் கேப்டனாகவும், தனஸ்ரீ துணை கேப்டனாகவும் செயல்பட்டனர்.மாணவி ஷோபிகா வாகனத்தை ஓட்டினார் (Pilot). மோட்டார் மற்றும் பியூயல் செல் தவிர்த்து, வாகனத்தின் மற்ற அனைத்து பாகங்களையும் மாணவர்களே வடிவமைத்துத் தயாரித்துள்ளனர். சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ப்ரோபெல் இண்டஸ்ட்ரீஸ் (Propel Industries), திரிவேணி, CoASTT, JA Motorsport மற்றும் ஹொரைசான் ஆகிய நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன.
முன்னதாக ஜனவரி 9-ம் தேதி கோவையில் நடைபெற்ற விழாவில், ப்ரோபெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் குறிச்சி குமார் இக்குழுவை வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.