June 25, 2018
தண்டோரா குழு
தமிழக அரசு கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு,தனிமனித பாதுகாப்பு உரிமைச்சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்திளர்களை சந்தித்த போது பேசிய அவர்,
“கண்பார்வையற்றவர்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை என்பதை வன்மையாக கண்டிப்பதாகவும்,கல்வி,வேலைவாய்ப்பு,சமூக பாதுகாப்பு,உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக அமுல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் கூட தமிழக அரசிடம் இல்லை.உச்ச நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய ஆணையின்படி மத்திய மாநில அரசுகள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாததால் மத்திய அரசின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காத தமிழக அரசு மீதும் வழக்கு தொடர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் கண்பார்வையற்றவர்களுக்கு உணவு பாதுகாப்பு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்ட வசதிகளையும் தமிழக அரசு கட்டாயம் செய்து தர வேண்டும்.
மேலும்,கண்பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பிரெய்லி புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்தால் அரசின் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.பார்வையற்றவர்களுக்கு சலுகைகள் வழங்காத ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் அரசு மீது அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்”.