August 4, 2021
தண்டோரா குழு
மாநகராட்சி சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகச் சுவர்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்களில் வணிக நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், அரசுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலகச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுக்க,அந்த சுவர்களில் தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், விழிப்புணர்வு ஓவியங்களை வரைய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாள்களாக மத்திய மண்டலப் பகுதிகளில் உள்ள சுவர்களில், சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, மக்களைக் கவரும் விதமான ஓவியங்களை வரைய அறிவுறுத்தினார். வரையப்பட்ட ஓவியங்கள் மீது மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.