May 14, 2018
தண்டோரா குழு
வேதாரண்யம் அருகே பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர் பாராட்டு விழா நடத்தி ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆயக்காரன்குளம் கிராமத்தில் இரா. நடேசனார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 45 வருடங்களாக பணியாற்றி வந்த ஆசிரியர் ஆனந்த ராஜ். இவர் கடந்த வாரம் ஓய்வுப்பெற்றார். ஆனந்த் ராஜ் ஓய்வு பெரும் தகவலறிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு சிறந்த பரிசளித்து பாராட்டு விழா நடத்த வேண்டும் விரும்பினர். இதையடுத்து, பணம் வசூலிக்க வேண்டும் என்பதால் மாணவர்கள் வாட்ஸ் ஆப்பில் “ஆனந்த் ராஜ் மாணவர்கள் அமைப்பு” என்ற பெயரில் ஒரு குரூப்பை உருவாக்கி அதில் முன்னாள் மாணவர்களை சேர்த்தனர்.
இவரிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி படித்த மாணவர்கள் விரும்பி நன்கொடை வழங்கினர். பின்னர் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஆசிரியர் ஆனந்த் ராஜிற்கு பாராட்டு விழா நடத்தினர். அவ்விழாவில், முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பிலான மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் மற்றும் தங்கச்செயின் மோதிரம் ஆகியவற்றை அன்பு பரிசாக வழங்கினர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில்,
ஆசிரியர் ஆனந்த ராஜ் அவரிடம் கல்வி பயின்றதால் தான் இந்த சமூகத்தில் நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். அவரால் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல மாணவர்கள் உருவாக்கியுள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் எங்களுக்கு புரியும் வகையில் பாடம் எடுப்பார், இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றனர்.