March 16, 2018
தண்டோரா குழு
ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45 ஆயிரம் ரூபாய் என பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 2018 – 19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் கூறியதாவது:
“தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் மேல்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.வக்ஃப் போர்டு தேர்தலை நடத்தாத அரசு சிறுபான்மையினருக்கான திட்டங்களை நிறைவேற்றும் என எப்படி நம்புவர்.? முதலில் தோன்றும் குறளை தவிர, இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே.விவசாயிகள், நெசவாளர்கள், மீனவருக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை. தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை. பட்ஜெட்டில், இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே ஏன்? காணாமல் போன ஆயிரம் சிலைகளை போல், துறையும் காணாமல் போய்விட்டதோ? ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45 ஆயிரம் ரூபாய். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு, எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.