• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் பேச்சுவார்த்தை குழப்பத்தில் தேமுதிக

March 6, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக தேமுதிகவை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜயகாந்த் தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கிடையில்,இன்று சென்னையில் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் மற்றும் ஜி.கே.வாசன் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. கூட்ட மேடையின் எல்.இ.டி திரையில் மோடி மற்றும் தலைவர்கள் படங்களுடன் விஜயகாந்த் படமும் இடம் பெற்றிருந்தது. அதைப்போல் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிகவின் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், மற்றொருபுறம் தேமுதிகவின் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக கூறி விட்டு அவர்கள் சென்றனர். இதற்கிடையில், ஒரே நேரத்தில், இரண்டு பக்கமும் தேமுதிக பேசியது, திமுக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பா.ஜ., பொதுக்கூட்ட மேடையில் இருந்து விஜயகாந்த்தின் படம் உடனடியாக அகற்றப்பட்டது.

தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறும்போது,

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக்கூறினார். அதற்கு ஸ்டாலின் ஊரில் இல்லை. எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன். வீட்டிற்கு வந்த தேமுதிக நிர்வாகிகளிடமும் இதனையே கூறினேன். கடைசி நேரத்தில் தேமுதிக திமுகவை நாடியதால் கொடுக்க சீட் இல்லை. திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம் எனக் கூரியுள்ளார்.

இது குறித்து சுதீஷ் கூறுகையில்,

துரைமுருகனுடன் பேசியது உண்மைதான். அதிமுக பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது அவருடன் பேசினேன். மத்திய அமைச்சர் கோயல் அழைப்பின் பேரில் , அவரை சந்தித்தோம். கூட்டணி குறித்தும், தொகுதி குறித்தும், எந்தெந்த தொகுதி என்பது குறித்தும் பேசினோம். பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். 2014 தேர்தலை போல் அனைவரையும் அழைத்து தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விரும்பினோம். எங்கள் கட்சியின் பலத்தின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இன்று நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி நிலை ஏற்பட்டுள்ளது. நாளை அல்லது மறுநாள் முடிவு ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்ற நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தேமுதிக தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க