January 18, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் தொடர்பாக குடும்ப அட்டைத்தாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதற்காக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களிடம் பயோ மெட்ரிக் மூலம் விரல் ரேகை பதிவு செய்யும் பணி நடைபெற்று வந்தது.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதன்காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு சர்வர் வேகம் அதிகரிக்கப்பட்டது.இதையடுத்து இந்த திட்டம் மீண்டும் மாவட்டத்தில் உள்ள 1,420 ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது. இதற்காக பயோ மெட்ரிக் முறைக்காக குடும்ப அட்டைத்தாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் தாலூக்கா வாரியாக உள்ள 1400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். குடும்ப அட்டைத்தாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடையும்,’’ என்றார்.