October 3, 2018
தண்டோரா குழு
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’விருதை ஐ.நா அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வழங்கினார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று நடத்துவதற்காகவும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பிரதமர் மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’விருதை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
பருவநிலை மாற்றம் என்பது இன்று உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கு கலாச்சாரமும் ஒரு காரணம். மக்களின் வாழ்வியலுடன் தொடர்பு இருப்பதால் அதற்கு ஏற்றவகையில் விவசாயம், தொழில் சார்ந்த கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்விருதைப் பெறுவதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்த விருதை ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணிக்கிறேன். சுற்றுச்சுழலை பாதுகாப்பது என்பது அனைத்து இந்தியர்களின் கடமை. 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என உறுதி ஏற்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.