April 12, 2018
தண்டோரா குழு
ஐபிஎல் போட்டியை சென்னையில் இருந்து மாற்றலாம் ஆனால் ஐபிஎல் மீதான சென்னை மக்களின் ஆர்வத்தை நீக்க முடியாது என முரளி விஜய் கூறியுள்ளார்.
2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 7ம் தேதி மும்பையில் துவங்கியது.தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.இதனால்,நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.போட்டி துவங்க சுமார் 4 மணி நேரம் இருந்த நிலையில்,அண்ணாசாலையில் அரசியல் கட்சியினர்,தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு தர போலீசார் மறுத்ததால்,வேறு இடத்திற்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நேற்று முடிவு செய்தது.இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாக குழு உறுப்பினர் வினோத் ராய் நேற்று அளித்த பேட்டியில்,பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்,புனே,திருவனந்தபுரம் மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 இடங்களை சிஎஸ்கே நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புனே மாநிலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில்,ஐபிஎல் போட்டியை சென்னையில் இருந்து மாற்றலாம்.ஆனால் ஐபிஎல் மீதான சென்னை மக்களின் ஆர்வத்தை நீக்க முடியாது என சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி வீரர் முரளி விஜய் டுவீட் செய்துள்ளார்.