March 16, 2018
தண்டோரா குழு
ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோனிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது.அதன்படி அதிகப்படியோனோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடோ போனைத் தான்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக ஏர்டெல் சேவையும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையும் நேற்று சரிவர கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.இதனிடையே புகாருக்கு விளக்கம் கொடுத்த ஏர்டெல், “சிரமத்திற்கு வருந்துகிறோம். சில இடங்களில் பிரச்னை இருந்தது உண்மைதான். தற்போது மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைலை சுவிட் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்யுங்கள் ” என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஏர்செல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது வோடோஃபோன் வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனெனில் வோடோஃபோனிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று பல இடங்களில் வோடோஃபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. நெட்வொர்க் சரியாமல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள வோடோஃபோன் இந்தியா, “இதுஒரு தாற்காலிகமான பிரச்னை. நாங்கள் அதனை சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்துவிடுவோம். பிரச்னை சரியான பின்பு உங்களால் சிரமமின்றி மற்றவர்களுக்கு தொடர்பு கெள்ள முடியும்” என விளக்கம் கொடுத்துள்ளது.