March 30, 2018
தண்டோரா குழு
ஏப்ரல் 1 முதல் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி என இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கின்றனர்.தற்போது வரை மாலையில் தாஜ்மகால் மூடப்படும் வரை பார்வையாளர்கள் அதை சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கபட்டு வந்தது.
இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அவர்களால் ஏற்படும் மாசின் அளவு அதிகரித்து வருவதாலும் பார்வையாளர் நேரம் குறைக்கப்படுகிறது.
இனி சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வாங்கும் நுழைவு சீட்டு 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.