April 8, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000யைத் கடந்துள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக இன்று உரையாடினார்.
அப்போது பேசிய அவர்,
கொரோனா எதிரொலியாக, உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.இந்த சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். நாட்டில் ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம். இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டாம். இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகளும், வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர்.எனவே ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காணொளி காட்சி மூலமாக நடந்த இந்த உரையாடலில் காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டியோ பாத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாக்கி மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் மிதுன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரதமரிடம் பேசினர்.