October 5, 2018
எஸ் 400 ஏவுகணை வாங்குவது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி – ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் கையெழுத்தானது.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.
இதையடுத்து, இன்று டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா, ரஷ்யா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அப்போது ரூ.36,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் ஓப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. எஸ்-400 ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 300 இலக்குகளை அடையாளம் காணும், ஒரே நேராத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது. மேலும், விண்வெளியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்திய கண்காணிப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய பிரதமர் மோடி,
இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவிற்கு பெரும் பங்கு உள்ளது. இரு நாடுகளும் சிறப்பான உறவை கொண்டு உள்ளன. இரு நாடுகளுக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாட்டு உறவு வலுப்பெறும். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்
பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் புடின்,
ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடு இந்தியா. விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப இந்தியாவிற்கு ரஷ்யா உதவி செய்யும். அமைதியை எட்டுவதற்காக நீண்ட கால கூட்டாளியாக இரு நாடுகளும் உள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உறவை இன்னும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.