April 20, 2018
தண்டோரா குழு
பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்வி சேகரின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநரின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை கேட்டார்.அதற்கு அவர் அந்த பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் தட்டினார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதற்கிடையில்,பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் கேவலமான முறையில் எஸ்.வி.சேகர் ஒரு பேஸ்புக் பதிவை பார்வார்டு செய்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.பின்னர் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில்,எஸ்வி சேகரின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,இந்தியா,குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள்.பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.பத்திரிகை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன்.ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.