February 1, 2018
கோவையில் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கேட்டு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் பிடித்து சாகுல் ஹமீது மற்றும் சையது இப்ராகிம் ஆகிய இருவரையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்கள் இவர்களை பிடிக்கும் போது வண்டியில் இருந்து கீழே விழுந்ததில் சாகுல் ஹமீது காயமடைந்துள்ளார். லேசான காயங்களுடன் காவல்நிலையம் அழைத்து சென்று சாகுல் ஹமீதை காவலர்கள் கடுமையாக தாக்கியதால் கோமா நிலைக்கு செல்லப்பட்டார்.
இந்நிலையில் சாகுல் ஹமீது என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து லேசான காயங்களுடன் காவல் நிலையம் சென்ற சாகுல் ஹமீதை காவலர்கள் கடுமையாக தாக்கியதில் தான் உயிரிழந்துள்ளார் என்றும் , மேட்டுப்பாளையம் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.