March 9, 2018
தண்டோரா குழு
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக , வருகிற 13 ஆம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சருடன் சென்று மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துமனையில் 30 கோடி ரூபாய் வரை தமிழக அரசின் சுகாதார துறை சார்பில் இருதிய துறை சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உயர்தர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது, பைப் லைன் கேத்லேப் மிக விரைவில நிறுவப்படும். ஜைக்கா திட்டத்தின் மூலம் 189 கோடி ரூபாயில் 79 வகையான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்றா நோய் தாக்கம் அதிகரித்துள்ளது இதற்காக புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு துறை ஓர் இரு மாதங்களில் கொண்டு வரப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர 700 ஏக்கர் கைவசம் உள்ள தமிழகத்தில் ஐந்து இடங்கள் உள்ளது என ஏற்கெனவே கூறப்பட்டது. மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேட்டு இருந்த அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டதாகவும் எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறினார்.
குறிப்பாக தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் தானும் வரும் 13 ஆம் தேதி மத்திய சுகாதார துறை அமைச்சரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து சந்திக்க உள்ளதாகவும் தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் காட்டி வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் எம் ஆர் ஐ வசதி கொண்டு வர உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தாய் சேய் நலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வசதிகளை செய்து உள்ளதாகவும் லஞ்ச புகார்கள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையின் டீன் அல்லது ஆர்எம்ஓ விடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் 104 எண்ணிற்கு மருத்துவமனையில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் எனவும் கூறினார்.
மேலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால நோய்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க அனைத்து சுகாதாரத்துறையிடம் உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.