April 19, 2018
தண்டோரா குழு
எச்.ராஜா தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என திமுகவின் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் திமுகவின் தோழமை கட்சிகள் சார்பில் வருகிற 23ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள திமுகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும்,திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்,
எச்.ராஜா தொடர்ந்து இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் திமுக தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும் என தெரிவித்தார்.மேலும்,சட்ட ரீதியாக எச்.ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.