July 5, 2018 
                                ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள்,பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது என இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் தனியார் தொலைக்காட்சியில் மோதல் ஏற்பட்டது தொடர்பாக இயக்குநர் அமீர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி அமீர்,கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து ஜூலை 9ம்  தேதிக்குள் இரு நபர் உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில் இயக்குநர் அமீர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.நீதிபதி கண்ணன் முன்னிலையில்
குமரேசன்,தனபால் ஆகிய இருவர் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்து உத்திரவாதம் அளித்தனர்.இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட இயக்குனர் அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர்,
“ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள்,பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது எனவும்,அப்படி பார்த்தால் தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவார்கள் என கூறினார்.சேலத்தில் உரிமைகளுக்காகவும்,வாழ்வாதாரத்தையும்,விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்குவது அதிகார வர்க்கத்தின் போக்கை காட்டுகிறது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது எனவும்,ஆனால் இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை மட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி தான் எனவும் அவர் தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.