November 27, 2020
தண்டோரா குழு
தி.மு.க இளைஞரணி தலைவரும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தி.மு.க இளைஞரணி தலைவரும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தி.மு.க.வினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக குணியமுத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட தலைவர் டேவிட்ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி கலந்துகொண்டு இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார். முன்னதாக 93 வது வார்டு பகுதியில் ஆதரவற்ற விதவை பெண்ணுக்கு சிற்றுண்டி வாகனம் வழங்கப்பட்டது.இதில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் லோகு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதேபோல ஏழை பெண்ணிற்கு சிறு தொழில் துவங்கும் விதமாக மாவு அரைக்கும் கிரைண்டர் வழங்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பொருளாளர் கோபிநாத் மாநகர துணை தலைவர் பாலசுப்பிரமணியம், துணைச் செயலாளர் கைலாசம் மற்றும் கோவை கபாலி, ஆர் டி பாலு மனோஜ் விவின், அஜித், சிவன், ராமபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.