June 22, 2018
தண்டோரா குழு
அரசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்துக்கு காரணமான பழுது அடைந்த பேருந்தை இயக்க கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்கு செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 14 ஆம் தேதி உதகை அருகே மாதாண்டா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் 4 பேரும் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் நீலகிரி மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்க சொன்னது தான் காரணம் என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து விபத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விபத்திற்கு காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்க கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற்பொறியாளர், பொறியாளர் ஆகிய நான்கு அதிகாரிகள் மேல் கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனி இதுபோல் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறை இருந்திருந்தால் இவர்கள் மட்டுமல்ல தினந்தோறும் சிகிச்சையை இல்லாமல் பறிபோகும் எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடியும், அதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தது போல் உதகை அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவ கல்லூரிக்கு இணையாக நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.