June 5, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பல பகுதிகளில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உதகையில் உள்ள ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் விழாவில் பங்கேற்றார்.இதனையடுத்து குப்பைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்காக உதகை காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் காலனிக்கு சென்றார்.அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் நடிகர் விவேக்கை முற்றுகையிட்டனர்.
தங்கள் பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், கழிப்பறை வசதிகள் ஏதும் சரிவர பராமரிப்பது இல்லை என நடிகர் விவேக்கிடம் கோரிக்கை வைத்தனர்.இதை சற்றும் எதிர்பாராத விவேக் தான் எந்த விதமான அரசியல் கட்சியை சாராதவன்,ஐயா அப்துல்கலாம் பணியில் சமூக பணிகளை மேற்கொள்பவன் அதனால் உங்கள் பிரச்சனைகளை இங்கு உள்ள அரசியல்வாதிகளிடம் கூறுங்கள் என நகைச்சுவை பாணியில் பதிலளித்தார்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.