October 3, 2018
தண்டோரா குழு
ஊட்டியில் மாயமானதாக கூறப்பட்ட சென்னையை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் கார் விபத்தில் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஜூட் என்பவர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, நேற்று மசினகுடி செல்வதாக ஓட்டல் நிர்வாகத்திடம் கூறிவிட்டு சென்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் ஹோட்டலுக்கு திரும்பாததால், நிர்வாகம் தரப்பில் ஊட்டி எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார், மசினகுடி, கல்லட்டி, முதுமலை உள்ளிட்ட இடங்களில் சென்று அவர்களை தேடினர்.
இதற்கிடையில் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்த இன்னோவா கார் கல்லட்டி மலை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 35-வது கொண்டை ஊசி வளைவில் கார் கவிழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று நிகழ்ந்த விபத்து பற்றி இன்றுதான் வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து மீட்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய 7 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.