October 3, 2018
தண்டோரா குழு
உச்சநீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றுள்ளார்.
கடந்த 1ஆம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய்க்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
யார் இந்த ரஞ்சன் கோகாய் ?
1954 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்த இவர் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர் கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார்.
அதன் பின் கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். பின்னர் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2011 ல் நியமிக்கப்பட்ட இவர் 2012 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இவர் அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கோகாயின் மாகனாவார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை நேரில் வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தவர். ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை நீண்ட நாளாக முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில் அதனை முடித்து வைத்தவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற தீபக் மிஷ்ரா மீது குற்றச்சாட்டுகள் வைத்த 4 நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.