January 30, 2021
தண்டோரா குழு
கோவை உக்கடம் அல்அமீன் காலனியில் 17 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86 ஆவது வார்டுக்கு உள்பட்ட அல் அமீன் காலனியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 26 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த 26 குடும்பத்தினருக்கும் செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆயினும், அமீன் காலனியில் உள்ள வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவுப் படி, சில நாள்கள் முன்பு அங்குள்ள வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 9 வீடுகள் இடித்து
அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்கள், செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறினர்.
இந்நிலையில், மீதமுள்ள 17 வீடுகளைச் சேர்ந்தவர்களும் அல் அமீன் காலனியில் வசித்த வீடுகளை கடந்த வாரம் காலி செய்து அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி, நகரமைப்பு அலுவலர்( திட்டம்) ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று 17 வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றினர்.