January 31, 2021
தண்டோரா குழு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் தான் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ் பி வேலுமணி, உக்கடம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 49.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் 520 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,
கோவையில் மொத்தம் 15 ஆயிரம் வீடுகள் கட்டபட்டு வருகிறது எனவும் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தவர்களுக்கு அதிக தொலைவில் வீடுகள் கட்டி கொடுக்கபட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமமே அதே பகுதியில் வீடுகள் கட்டப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். வீடுகள் 400 சதுர அடியில் லிப்ட் வசதியுடன் கட்டப்படும் என தெரிவித்த அவர், தமிழக அரசு ஜாதி மதம் கடந்து அனைத்து திட்டங்களுக்கு செயல்படுத்தபட்டு வருகிறது என்றார். 116 கோடி மதிப்பீட்டில் 1195 வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்த அவர், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசுகையில், போலியோ நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் 1589 மையங்களில் இன்று சொட்டு மருந்து வழங்கப்படுகிறது எனவும், மாவட்டம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அரசால் வழங்கப்படும் சொட்டு மருந்து பாதுகாப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.