March 22, 2018
தண்டோரா குழு
கோவையில் ஈஷா யோக மையம் சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று(மார்ச் 22)நடத்தப்பட்டது
கோவையில் மக்கள் தொகை பெருக பெருக தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவை தண்ணீர்.மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக நடைபெறும் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இன்னும் 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.இதனால் தண்ணீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நீண்ட கால அடிப்படையிலான துரித நடவடிக்கைகள் மட்டுமே இதற்கான தீர்வை தரக்கூடியதாக இருக்கும்.இதற்காக ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நாளில் தண்ணீர் சேமிப்பு அதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் ஈஷா யோக மையம் சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.ஈஷா தன்னார்வ தொண்டர்கள் சார்பில் உலக தண்ணீர் தினம் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதனை நதிகள் மீட்பு ஒருங்கிணைப்பாளர் எத்திராஜுலு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.இதில் கலந்துகொண்டவர்கள் தண்ணீரின் அவசியத்தை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.சுமார் 22 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து பேரணியில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதுமான அளவு இல்லததால் அதனை வீணடிப்பதாகவும்,இனி வரும் காலங்களில் தண்ணீருக்காக ஒரு யுத்தமே நடக்கும் அபாயம் உள்ளது.இனி வரும் காலங்களில் தண்ணீரை சிக்கனமாக சேமித்தும், குழந்தைகளிடம் தண்ணீரின் அவசியத்தை எடுத்துரைத்து அவர்களிடமும் சேமிப்பின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.