October 16, 2025
தண்டோரா குழு
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘ஒன் ஹெல்த்’ எனும் அணுகுமுறை குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது.
‘ஒன் ஹெல்த்’ என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த, ஒத்திசைவான அணுகுமுறையாகும். இது, உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களைத் தடுக்க, கணிக்க, கண்டறிய மற்றும் அதற்கான தீர்வளிக்க பல்வேறு துறைகள், பிரிவுகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார். இஸ்ரேலின் நெகேவ்வில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டேனியல் சாமோவிட்ஸ் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் குளோபல் என்கேஜ்மென்ட் துறை இயக்குநர் பேராசிரியர் விஜிலா எட்வின் கென்னடி அவர்கள், மாணவர்கள்,சர்வதேசப் பேச்சாளர்கள் மற்றும் தொழில்துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறையைச் சேர்ந்த பிற முக்கியப் பேச்சாளர்களை வரவேற்றார்.
இந்நிகழ்வில் இஸ்ரேல், இலங்கை, நேபாளம் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களும், கே.எம்.சி.ஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), கேர் ஹெல்த், மல்லா ரெட்டி பல்கலைக்கழகம், அருளகம் மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை போன்ற மதிப்புமிக்க அமைப்புகளைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பயிற்சியாளர்களும் பேச்சாளர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்வில் 8 குழு விவாதங்கள், 7 முதன்மை வகுப்புகள் (master classes) மற்றும் 2 பயிலரங்கங்கள் (workshops) நடைபெறும் என்று பேராசிரியர் விஜிலா தெரிவித்தார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் அவர்கள் தனது தலைமை உரையில்,
‘ஒன் ஹெல்த்’ என்பது உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு கூட்டு, பல்துறை, பன்முக அணுகுமுறையைக் குறிக்கிறது என்று கூறினார்.
“இந்தியாவிடம் பாரம்பரிய அறிவு உள்ளது. இந்தியா நவீன அறிவில் செயல்படுகிறது. ஆனால் இந்தியாவிற்கு எதிர்காலத் தீர்வுகள் தேவை, ஏனெனில் நாம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்ட நாடாக உள்ளோம். இந்த் 1பில்லியன் மக்களைத் தவிர, தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் பலவற்றின் இல்லமாக இந்தியா உள்ளது. அவற்றின் நலனை கருத்தில் கொண்டு நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
நிகழ்வில் பங்கேற்றவர்கள், குறிப்பாக இளம் மாணவர்களிடம் அவர் பேசுகையில் ‘ஒன் ஹெல்த்’ என்பது நிச்சயமாக அனைவரின் எதிர்காலத்திற்கான ஒரு திட்டமாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். எதிர்கால ஆரோக்கியம் என்பது அதை நீங்கள் எவ்வாறு மறுவரையறை செய்கிறீர்கள், எவ்வாறு கண்டறிகிறீர்கள், எவ்வாறு ஆராய்ச்சி செய்கிறீர்கள், அதற்கான தீர்வுகளில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதன்மை விருந்தினரும், இஸ்ரேலின் நெகேவ்வில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தின் தலைவருமான பேராசிரியர் டேனியல் சாமோவிட்ஸ் அவர்கள் தனது தொடக்க உரையில், இந்த இரண்டு நாட்களில், பல தலைப்புகள் மற்றும் துறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பொதுவாகச் சந்திக்காத பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே நோக்கத்துடன் ஒன்றிணையும்போது உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவருகிறது என்றும் அவர் கூறினார். இஸ்ரேலும் இந்தியாவும் இணைந்து இதுகுறித்த ஆராய்ச்சிகளில் பணியாற்றினால் அதனால் ஏற்படும் முடிவுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை வழங்கும் என கற்பனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். நிச்சயமாக கூட்டுமுயற்சியால் நிறைய சாதிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துவக்க நிகழ்வின் நிறைவில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் பென்-குரியன் பல்கலைக்கழகத்திற்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சர்வதேச கல்விப் பங்களிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது எனவும் இது எல்லை தாண்டிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை வளர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.