November 27, 2017
தண்டோரா குழு
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரிக்கும் அமெரிக்க நடிகர் மேகன் மார்க்லுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் இரண்டாவது மகனான இளவரசர் ஹாரி(33). இவரும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு அரச குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் இன்று(நவம்பர் 27)வெளியிட்ட ஒரு அறிக்கையில், “2018ம் ஆண்டு வசந்த காலத்தில்,இவர்களுடைய திருமணம் நடைபெறும். இளவரசர் ஹாரி தனது திருமணம் குறித்து, ராணி எலிசபெத் மற்றும் நெருங்கிய குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மார்க்கெலின் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்,” என்று தெரிவித்தார்.
“எங்கள் மகள் எப்போதுமே அன்பானவர். ஹாரியும்அதே குணங்களை கொண்டுள்ளதால், பெற்றோர் ஆகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.வாழ்நாள் முழுவதும் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்” என்று மார்க்கெலின் பெற்றோர்களான தாமஸ் மார்க்லே மற்றும் டோரியா ராகல்ட் தெரிவித்துள்ளனர்.