March 6, 2018
தண்டோரா குழு
இலங்கையில் கண்டியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்த 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் திசநாயகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்டி மாவட்டத்தில் சிங்களர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதையடுத்து ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு வணிக நிறுவனம் தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வன்முறை பல இடங்களுக்கு பரவியது. இதனால் கண்டி பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் அதிபர் சிறிசேனா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் திசநாயகா தெரிவித்தார்.
மேலும் ராணுவம், போலீசார் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலை தளம் மூலம் சட்டவிரோத பிரசாரம் நடப்பதை கட்டுப்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.