April 27, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்றை கட்டுப்படுகிறோம் என்ற பெயரில் அன்றாட மக்களின் மீது அறிவிக்கப்படாத போரை தொடுக்காதீர்கள் என கோவை மாவட்ட சில்லரை மீன் வியாபாரிகள் சங்க துணை தலைவர் MH.அப்பாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதுடன், அதன் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் தமிழக அரசு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஏழை எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், மற்றும் அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் சாமானியர்கள் மீது தொடர்ந்து அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் செயல்படாது என்ற அரசின் அறிவிப்பு இறைச்சி கடை நடத்துபவர்களுக்கு மட்டுமின்றி அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவர்களை நம்பி குடும்பம் நடத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கும் அது பாதிப்பாக அமைகிறது.
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தான் மீன் கடை வியாபாரிகளுக்கு வியாபாரம் சற்று நன்றாக இருக்கும்.ஆனாலும் அரசின் அறிவிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதற்கு ஒத்துழைப்பு நல்கிய நிலையில் சனிக்கிழமையும் செயல்படாது என்று அறிவிப்பு வந்துள்ளது அதிர்ச்சியாகவே உள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பொருளாதார பாதிப்பு,நிதி நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில் தொழில் செய்து வருபவர்களும், அதில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் இதுபோன்ற தொடர் அறிவிப்புகள் அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.
அன்றாடம் டாஸ்மாக் கடைகளிலும்,மதுபான கூடங்களிலும் கூடும்போது வராத கொரானா வியாபாரம் செய்யும் பொழுது தான் வந்துவிடுமா என்ற கேள்வி ஏழை எளிய சாமானிய மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.அரசின் இந்த அறிவிப்பு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வேலை இழப்பு ஏற்படுவதுடன் அன்றாடம் குடும்பம் நடத்துவதே பெரும் போராட்டமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அரசு இவ்விஷயத்தை மறுபரிசீலனை செய்து உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தி வியாபாரிகள் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோவை மாவட்ட சில்லரை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.