April 4, 2020
தண்டோரா குழு
ஒரு வாடிக்கையாளர் 30 வினாடிகளுக்கு மேல் இறைச்சி கடையில் நிற்பதற்கு அனுமதியில்லை உட்பட இறைச்சி கடைகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஞாயிறன்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சமூக இடைவெளி அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்து வரும் நிலையில், நாளை ஞாயிறு என்பதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறைச்சி கடைகளுக்கு கோவை மாநகராட்சி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. மிகவும் குறுகலான பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் செயல்பட அனுமதியில்லை,இறைச்சிகளை கடைகளில் தொங்கவிடுவதும், வாடிக்கையாளர்கள் வந்த பின் இறைச்சியை மக்கள் முன் வெட்டக்கூடாது.
வாடிக்கையாளர் வரும் முன்பே ரத்தம்,
குடல், ஈரல் போன்ற இறைச்சிகளை சுகாதார முறையில் வெட்டி பார்சல் செய்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சி கடைக்காரர்கள் ஒரு நபரை நியமித்து விசில் ஒலி மூலம் வாடிக்கையாளர்களை 3 அடி இடைவெளியில் நிறுத்தி அதை ஒழுங்கப்படுத்த வேண்டும். இறைச்சி விற்பனையாளர்கள் முடிந்தவரை தங்களது வாடிக்கையாளர்களிடன் செல்போன் மூலம் ஆர்டர்களை வீடுகளில் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஞாயிறன்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடை உரிமையாளர்கள் தங்களது பொறுப்பில் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத இறைச்சி கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.