February 20, 2021
தண்டோரா குழு
இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக கோவை-நாகர்கோவில் இடையே ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில்பட்டி-கடம்பூர் இடையே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு கோவைக்கு இயக்கப்படும் ரயில் வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த ரயில் மதுரையில் இருந்து கோவை வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படாது.
இதேபோல் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் வரும் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து மதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.இதேபோல் நாகர்கோவிலில் இருந்து இரவு 9.45 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் வரும் 26-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை-கோவை இடையே வழக்கம்போல் இயக்கப்படும்.
மேலும் கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு செல்லும் ரயில் வரும் 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 3 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவை-மதுரை இடையே வழக்கம்போல் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.