January 16, 2021
தண்டோரா குழு
நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 40 வகையான நமது பாரம்பரிய அரிசி வகைகளை அடுக்குவார் நமக்கு தெரிந்ததெல்லாம் ஐஆர் எட்டும், பொன்னியும்தான் நமது பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுத்து இயற்கையோடு இணைந்து ஆரோக்கிய வாழ்வு வாழ அழைக்கிறது கோவையில் நம்ம ஊரு சந்தை. கோவையில் கூடுகிறது நம்ம ஊர் சந்தை.
கோவை கிராஸ்கட் ரோட்டில் பவர் அஸ் எதிரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடும் நம்ம ஊரு சந்தையில் நமது பாரம்பரிய அரிசி வகைகள் பலவற்றை நீங்கள் வாங்கலாம் சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச்சக்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகை பொருட்கள், காய்கறி, கீரைகள், பழங்கள், நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், மூலிகை தேனீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், வீட்டு வைத்திய மூலிகை பொடி, வகைகள் அத்தனையும் அங்கு கிடைக்கும் நம் சீதோஷ்ண நிலைக்கு உகந்த உள்ளாடைகள், அணையாடைகள், உடல் சுத்தப்பொடிகள், வெட்டி வேர் பொருட்கள், சுத்தப்படுத்திகள், மண்பாண்ட பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் கைவினை பொருட்கள், எல்லாவற்றையும் இங்கே பார்த்து ரசித்து வாங்கலாம் மதியம் இயற்கையான உணவு வகைகள், அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, நீரா பானம் போன்றவற்றையும் ருசிக்கலாம்.
மேலும் இங்கு நெகிழி இல்லா சந்தையை போற்றும் வகையில் எண்ணெய் வாங்க பாத்திரங்களும் பொருட்கள் வாங்க துணிப் பையையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.