May 18, 2018
தண்டோரா குழு
இன்றைய ஐபிஎல் போட்டியின்போது எனது அடுத்தக்கட்ட பயணத்தை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்ஜே-வான பாலாஜி காமெடியனாக படங்களில் நடித்து வருகிறார்.பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் ஆர்ஜே பாலாஜி,ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.சமீபத்தில் அவர் அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையில்,தனது கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக்,ட்விட்டரில் வெளியிட்டு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தினார்.அப்போது,அது அரசியல் கட்சி அறிவிப்பு அல்ல, கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இன்று புதிதாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.அதில்,”உங்கள் அனைவரது பேராதரவிற்கும்,பேரன்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.மே 18ம் தேதி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்கள் இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் எனது அடுத்தகட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.வணக்கம்,நன்றி ஆகிய எழுத்துகளை கட்சி கொடி நிறத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்,இன்று சிஎஸ்கே மேட்சுடன் ஆர்ஜே பாலாஜி பற்றிய அறிவிப்பும் வெளியாகவிருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.