May 26, 2021
தண்டோரா குழு
இந்த ஊரடங்கின் முழு பயன் அடுத்த ஒரு சில நாட்களில் தெரியவரும் கோவை ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 100 படுக்கைகள் வசதிகளுடன் சுமார் 12 முதல் 15 வரை கொரோனா சிகிச்சை மையங்கள் அரசு மூலம் இயங்கி வருவதாகவும், அந்தந்த கிராம ஊராட்சி அளவிலும் ஊரக பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஒரு சில இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.
கூடுதலாக முழுக்க முழுக்க தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஊரடங்கில் தொற்று பரவல் பெருமளவில் குறைக்கப்படும் என நம்பப்படுவதாகவும், இரண்டரை வாரங்கள் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கின் முழு பயன் அடுத்த ஒரு சில நாட்களில் தெரியவரும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தவர்,பொதுமக்களும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றும்போது தொற்று பரவல் தடைப்பட்டு, ஒருவரிடமிருந்து ஒரு நபருக்கு மேல் பரவினால் கட்டுப்பாடற்ற தொற்று கூடிக்கொண்டே இருக்கும், ஆனால் அது குறைந்தபட்ச அளவில் ஒன்றை விட என்ற அடிப்படையில் இருந்தால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தொற்று விதிகளின் அடிப்படை என்பதால் தொடர்ச்சியாக ஊரடங்கு இருக்கும் என ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் 700 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிக்காதவாரு அத்தியாவாசிய தேவைகளான காய்கறிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியவர், ஆக்சிஜன் தேவையை பொருத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைத்து வருவதாகவும், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்று வந்த சில பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் பெற்று வரும் நிலையில், இடைப்பட்ட மருத்துவமனைகளான, ஒரு நாளைக்கு ஒரு கிலோ லிட்டர் என பெற்று வந்த 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட 20 மருத்துவமனைகளுக்கு ரேஷனாக பிரித்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், தட்டுப்பாடு ஏற்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டு வருவதாகவும், கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போதுமான ஆக்சிஜன் கிடைத்து வருவதாக கூறியவர்,
2000 மருத்துவர்கள், 7000 செவிலியர்கள் மாவட்டத்திற்கு தேவையானவர்கள் வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.