December 23, 2025
தண்டோரா குழு
இந்தோராமா இந்தியா நிறுவனத்திற்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளுடன் இணைந்த வர்த்தகக் கடன்’ ரூ.670 கோடியை டிபிஎஸ் வங்கி இந்தியா வழங்கி உள்ளது.
இந்தோராமா இந்தியா, இந்தோராமா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும்.உரம் தயாரிப்புத் துறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத மற்றும் பாதுகாப்பான உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த கடன் தொகையை இவ்வங்கி வழங்கி உள்ளது. பசுமை இல்ல வாயு வெளியேற்றம், நீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய இந்த கடன் தொகையை இந்தோராமா பயன்படுத்த உள்ளது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளின்படி இந்த கடனை வழங்கி இருப்பதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதை இது உறுதி செய்கிறது. இதில் லெட்டர் ஆப் கிரெடிட், கொள்முதல் ரசீது நிதியுதவி மற்றும் இறக்குமதிக்கான முன்பணம் ஆகியவை அடங்கும். இது இந்தோராமா இந்தியாவின் வர்த்தகம் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
இது குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திவ்யேஷ் தலால் கூறுகையில்,
“வாடிக்கையாளர்களுக்கான பொறுப்பான வங்கிச் சேவையே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். நீண்ட கால சுற்றுச்சூழல் நன்மைகளுடன் நிதி உதவியை இணைக்க இதுபோன்ற திட்டங்கள் உதவுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் நிலைத்தன்மையை இணைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்றார்.
இந்தோராமா இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி மனிஷ் குமார் அகர்வால் கூறுகையில்,
“டிபிஎஸ் வங்கி அளித்துள்ள கடன் தொகையானது, எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இது எங்கள் பணப்புழக்கத்தை வலுப்படுத்துவதுடன், பொறுப்பான வணிக முறைகளை பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது. எங்களின் சுற்றுச்சூழல் சார்ந்த நிதித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும் என்று தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் டிபிஎஸ் வங்கி இந்தியா மேற்கொண்ட தொடர்ச்சியான பசுமை நிதி ஒப்பந்தங்களின் வரிசையில் இதுவும் இணைகிறது. டாடா ரியாலிட்டி நிறுவனத்திற்கு ரூ.1,280 கோடி பசுமை கடனையும், அதேபோல், அசீம் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 80 மில்லியன் டாலர் பசுமை நிதி கடனையும் இவ்வங்கி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.