September 28, 2018
தண்டோரா குழு
இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் ஊருக்குள் கடல்நீர் வெள்ளம் போல் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியது, பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். அங்க பதட்டமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்தது. 2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.இந்நிலையில், சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இந்தோனேஷியா நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.