June 14, 2021
தண்டோரா குழு
இந்து கோவில்களில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குவதாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும், பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து கோவை தெற்கு தொகுதியின் எம் எல் ஏ வும் பாஜக வின் அகில இந்திய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது , பெண்களும் அர்ச்சகராலம் என சொல்லியிருக்கிறார்.விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சொல்லி வருவதாகவும், தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருவதாகவும், பெண்கள் மேல்மருவத்தூர், மற்றும் சமுதாய கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர். இதில் தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை என்றார்.
உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்திரவின்படி ஆகம கோவில்களில் ஆகம விதிப்படி தான் பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதில் பக்தர்களின் உணர்வு, கோவில் நிர்வாகத்தின் ஆலோசானையின் படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும் என்றார்.
திமுக இந்துக்களுக்கும் , இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் என தான் சொல்லவில்லை எனவும், அதன் தலைவர்களே சொல்லி இருப்பதாக கூறினார்.இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா, உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழக அரசு உண்மையாகவே இந்து கோவில்களின் மீது அக்கறை இருந்தால் , கோவில் சொத்துக்ள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்றார். மேலும் கோவில் சொத்துக்களை பாதுக்காக்க ஆதினங்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.