February 15, 2018
தண்டோரா குழு
கோவையில் காதலர் தினத்தில் இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்க கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டனர். தாலி கட்டப்பட்டும், நெற்றியில் குங்கும பொட்டும் வைத்திருந்த ஆலமேலு என்ற ஆட்டையும், அஞ்சலி என்ற நாயையும், இந்து அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருமணம் செய்ததாகவும், இவற்றிக்கு விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என தாலி கட்டியவுடன் வாழ்வது தான் கலாச்சாரம் எனக்கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டு சென்றதாகவும் தபெதிக அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.
மேலும் ,இவற்றை கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்த ஒராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் கூறிய அவர், தங்களது அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனு தாக்கல் செய்வார்கள் என தெரிவித்தார். இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.