March 29, 2021
தண்டோரா குழு
இந்திய ரயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.எஃப்.சி., பத்திர வெளியீடு மூலமாக, 1,375 கோடி ரூபாய் நிதியை, திரட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இருபதாவது ஆண்டில் முதிர்ச்சியடையும் வகையிலான, 6.80 சதவீத வட்டி வருவாய் கொண்ட இந்த பத்திரம், அரசாங்கத்தின் பத்திரங்களின் வருவாயை விட,18 அடிப்படை புள்ளிகள் குறைவானதாகும்.உயர் மதிப்பீடு கொண்ட ஒரு அரசு நிறுவனம், இவ்வளவு பெரிய வித்தியாசத்தில், உள்நாட்டு சந்தையில், பத்திரங்களை வெளியிட்டுள்ளது ஓர் அரிய நிகழ்ச்சியாகும்.
அரசின் பங்கு முதலீடு குறைவது, புதிய பங்கு வெளியீட்டுக்கு பிறகான ரிஸ்க் மற்றும் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஆகிய பிரச்னைகளை தாண்டி, ஐ.ஆர்.எஃப்.சி.,பத்திரங்கள் மீது, நாட்டின் கடன் பத்திர முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது என, நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பத்திர வெளியீடு, முதலீட்டாளர்களிடமிருந்து,குறிப்பாக, நீண்டகால, தீவிர முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அடிப்படை வெளியீட்டு அளவான, 500 கோடி ரூபாயுடன் ஓப்பிடும்போது, இந்த பத்திர வெளியீட்டுக்கு, ஆறு மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில்,ரயில்வே அமைச்சகம் நிர்ணயித்திருக்கும் கடன் இலக்கை அடிப்படையாகக் கொண்டு,1,375 கோடி ரூபாயை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு மூலதன சந்தையில், 20 ஆண்டு பத்திர வெளியீடு மூலமாக திரட்டப்பட்ட நிதி, 13,970 கோடி ரூபாயை எட்டியுள்ளது. உள்நாட்டு சந்தையில், கார்ப்பரேட் பத்திரங்கள், 10 ஆண்டுகள் வரை முதிர்வுகால ஒப்பந்தம் கொண்டவையாக இருக்கின்றன.
இந்நிலையில், ஐ.ஆர்.எஃப்.சி.,யின் இத்தகைய பெரிய பத்திர வெளியீடுகள், நீண்ட கால, மிக நீண்டகால பத்திர வெளியீட்டுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில், இது போன்ற பத்திர வெளியீட்டுக்கான விலையை நிர்ணயம் செய்வதற்கான புதிய அளவுகோலையும் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்திய ரயில்வேயின் வளர்ச்சி,அதன் விரிவாக்கம், மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றில், ஐ.ஆர்.எஃப்.சி., ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.நடப்பு நிதியாண்டில்,இந்த நிறுவனத்தின் ஆண்டு கடன் இலக்காக, ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த,6 ஆண்டுகளில்,ஐ.ஆர்.எஃப்.சி நிறுவனம், இந்திய ரயில்வேக்கு வழங்கும், கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம், 45.70 சதவீதமாக உள்ளது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளிலிருந்து, பலதரப்பட்ட வழிகளில் கடன் வாங்குவதன் மூலம், வருடாந்திர கடன் இலக்கு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.இதில் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக பெறப்பட்ட, 4.08 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளி வணிக கடனும் அடக்கம்.
வெளி வணிக கடன்களில், ஜி.எம்.டி.என்., எனும், உலகளாவிய நடுத்தர கால பத்திர திட்டத்தின் கீழ், 750 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட, 10 ஆண்டு வெளிநாட்டு பத்திர வெளியீடும் அடங்கும்.அத்துடன், 7 முதல், 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறை கொண்ட, வெளிநாட்டு நாணய கடன் மூலமாக, 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன், முன்னணி பொதுத்துறை வங்கியின் மூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும், 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான, 10 ஆண்டு பத்திர வெளியீடு, அதிக வரவேற்பை பெற்று, கிட்டத்தட்ட நான்கு மடங்கு அளவுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இவ்வளவுக்கும், இ.எம்.பி.ஐ., எனும், வளரும் சந்தைகளின் பத்திர குறியீடு ஐ.பி.ஓ.,வில் சேர்க்க தகுதியற்றது என்றபோதிலும்,இது, 2.80 சதவீதம் எனும் சாத்தியமான விலையை பெற முடிந்தது. இது, 10 ஆண்டு அமெரிக்க கருவூல, 167.5 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் ஆகும்.
ஐ.ஆர்.எஃப்.சி வழங்கிய பத்திரங்கள், அதன் பட்டியலிடப்பட்ட ஆவணங்களின், இரண்டாம் நிலை சந்தை வருவாயை விட, 7 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைவாக இருந்தன.