July 4, 2025
தண்டோரா குழு
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இது, ஆதித்யா பிர்லா குழுமத்தின் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புகாரின் பேரில் எடுக்கப்பட்டது.கிராசிம், டெக்கரேட்டிவ் பேயிண்ட் துறையில் ஆசியான் பேயிண்ட்ஸ் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, டீலர்களுக்கு தள்ளுபடி, வெளிநாட்டு சுற்றுலா போன்ற சலுகைகளை வழங்கி, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யாதவாறு வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பிர்லா தயாரிப்புகளை விற்பனை செய்யும் டீலர்களின் விற்பனை இலக்குகளை உயர்த்தியதோடு, நில உரிமையாளர்கள், சி&எப் முகவர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குபவர்களுக்கு கிராசிம் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளாத வகையில் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை ஆய்வில்,நீதிமுறைக்கு முரணான செயல்கள் நடைபெற்றதாக சி.சி.ஐ கண்டறிந்தது. எனவே, இயக்குநர் பொது மேலாளரிடம் (DG) 90 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் ₹80,000–₹90,000 கோடி மதிப்புள்ள பேயிண்ட் சந்தையில், ஆசியான் பேயிண்ட்ஸ் நிறுவனம் 53% உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. 74,000-க்கும் மேற்பட்ட டீலர்களும், 1.6 லட்சம் டச் பாயிண்டுகளும் கொண்ட விநியோக வலையமைப்பை வைத்துள்ளது. ஆனால் 2024 பிப்ரவரியில் அறிமுகமான கிராசிம் நிறுவனத்தின் ‘பிர்லா ஓபஸ்’ பிராண்ட், 2025 மார்ச்சுக்குள் சுமார் 7% சந்தை பங்கினை பெற்றுவிட்டது (எலாரா கேபிட்டல் தகவல்படி).
2022-இல் JSW பேயிண்ட்ஸ் நிறுவனமும் இதேபோன்ற புகாரை தாக்கல் செய்திருந்தது. ஆனால் அதனை CCI நிராகரித்தது. தற்போது, ஆசியான் பேயிண்ட்ஸ் நிறுவனம் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கவுள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.