March 7, 2026
தண்டோரா குழு
டிபிஎஸ் வங்கி சமீபத்தில் இந்தியாவில் நடத்திய ‘பெண்கள் மற்றும் நிதி’ தொடர்பான புதிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வை இவ்வங்கி டெலாய்ட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டது.
2026 சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள 1,342 பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது வடக்கில் 23 சதவீதம், தெற்கில் 36 சதவீதம், கிழக்கில் 14 சதவீதம், மேற்கில் 27 சதவீதம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண் தொழில்முனைவோர், அதிக சொத்து மதிப்புள்ள பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள் ஆகியோரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிபிஎஸ் வங்கியின் ஆய்வின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. பெண்கள் சுயமாக நிதி முடிவுகளை எடுப்பது, அவர்களின் வாழ்க்கை இலக்குகள், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் செயலிகளைப் பயன்படுத்துவதில் உள்ள விருப்பம், வேலையில் எடுக்கும் இடைவெளி, வேலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை மற்றும் நீண்ட கால நிதித் திட்டமிடல் ஆகியவை குறித்து இது விரிவாக கூறுகிறது. பெண்கள் நிதி முடிவுகளைத் தாங்களே சுயமாக எடுப்பது இப்போது அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வில் பங்கேற்ற பெண் தொழில்முனைவோரில் 69 சதவீதம் பேர் நிதி முடிவுகளைத் தாங்களே எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
இது கிராமப்புறப் பெண்களிடம் 60 சதவீதமாகவும், அதிக சொத்து மதிப்புள்ள பெண்களிடம் 58 சதவீதமாகவும் உள்ளது. வயது மற்றும் அனுபவம் அதிகரிக்கும் போது, நிதி முடிவுகளை எடுப்பதில் பெண்களின் நம்பிக்கையும் கட்டுப்பாடும் அதிகரிப்பதையே இது காட்டுகிறது. நகர்ப்புற இந்தியப் பெண்கள் தங்களின் வங்கியைத் தேர்ந்தெடுப்பதில் அந்த வங்கி உலக அளவில் செயல்படுகிறதா என்பதை அதிகம் கவனிக்கிறார்கள். 89 சதவீதம் பெண் தொழில்முனைவோரும், 84 சதவீதம் அதிக சொத்து மதிப்புள்ள பெண்களும் பன்னாட்டுத் தொடர்புள்ள வங்கிகளையே விரும்புகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக, 81 சதவீதம் பெண் தொழில்முனைவோரும், 80 சதவீதம் அதிக சொத்து மதிப்புள்ள பெண்களும் ஏற்கனவே உலகளாவிய வங்கிகளில்தான் கணக்கு வைத்துள்ளனர். தொழில் விரிவாக்கம் மற்றும் முதலீடுகளுக்கு இது வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
பெண் தொழில்முனைவோருக்குத் தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் (பணம்) முக்கியம் என்றாலும், அது மட்டுமே போதாது என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.44 சதவீதம் பேர் பிற தொழிலதிபர்களின் ஆலோசனை மற்றும் நெட்வொர்க்கிங் வசதியை விரும்புகின்றனர். 40 சதவீதம் பேர் தங்கள் துறை சார்ந்த வழிகாட்டுதலை எதிர்பார்க்கின்றனர். 33 சதவீதம் பேர் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டைப் பெற, முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வளர்க்க விரும்புகின்றனர். 22 சதவீதம் பேர் அரசுத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆதரவை எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆய்வு அறிக்கை குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திவ்யேஷ் தலால் கூறுகையில்:
“பெண் தொழில்முனைவோர் ஒரு வங்கியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வங்கியின் நம்பகத்தன்மைக்கும் உலகளாவிய தொடர்புகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. எல்லைகள் தாண்டித் தொழிலை விரிவுபடுத்தவும், உலகளாவிய சந்தைகளை அணுகவும் உதவும் நம்பகமான கூட்டாளர்களையே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.