February 1, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர், கல்பனா சாவ்லாவின் 15ம் ஆண்டு, நினைவு தினம் இன்று(பிப் 1) அனுசரிக்கப்படுகிறது.
கல்பனா சாவ்லா கடந்த 1962ம் ஆண்டு, மார்ச் மாதம் ஹரியானாவில் பிறந்தார்.அவர் அதே மாநிலத்தில் உள்ள கர்ணால் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக் துறையில் படித்தார். கடந்த 1982ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பிறகு, கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
கடந்த 1997ம் ஆண்டு, கொலம்பியாவின் விண்வெளி விண்கலSTS-87 என்னும் விமானத்தில் பறக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, 2003 ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி சாவ்லா உட்பட 7 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு கிளம்பியது. தனது ஆராய்ச்சியை முடித்து விட்டு பிப்ரவரி 1-ம் தேதி திரும்பிய போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறங்குவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் வெடித்து சிதறியது.இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்தனர்.
இந்நிலையில், இன்று கல்பனாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.