May 6, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் உக்கடம் ராமர் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் காய்கறி சில்லரை விற்பனை மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் முஹமது கனிராவுத்தர் வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட், ராஜ வீதி, கருப்பகவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகைக்கடைகள், ஷாப்பிங் கடைகள், அரிசிக்கடைகள், பேக்கரிகள் மொத்த மற்றும் சில்லரை வியாபாரக்கடைகளின் உரிமையாளர்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருந்த 11 நபர்களுக்கு தலா ரூ.200ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500ம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியம், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.