November 18, 2020
தண்டோரா குழு
ஆபத்தான கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் உத்திரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை இலேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த மழையானது மேலும் ஓரிரு நாட்களுக்கு தொடரலாம். எனவே தேவையான இடங்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.மழைநீர் சாலையில் தேங்கும் இடங்களில் உடனடியாக அகற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது.
இரயில்வே சுரங்கப்பதாதை, லங்கர் கார்னர், அவினாசி ரோடு மேம்பாலம், கிக்கானி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல ஏதுவாக உள்ளது. மேலும், மழையின் காரணமாக பழுதடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு சரி செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மழையின் காரணமாக முறிந்துவிழுந்த மரங்கள்
மாநகராட்சியின் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.கால்வாய்களில்
அடைப்புகள் ஏற்பட்டு வெள்ள நீர் பாதிப்பு ஏற்படும் அனைத்து இடங்களில் அடைப்புகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு கோவை மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 327ன்படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 81 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டுள்ளது.இதில் 19 கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களிலிருந்து காலி செய்ய மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், இதுவரை காலி செய்யாதவர்கள் வரும் 20.11.2020க்குள் காலி செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் 21.11.2020 முதல் காவல்துறையினர் உதவியுடன் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்