June 21, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட
ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் வசிப்போர்கள் உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு வழங்கி பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில் ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 10ம் தேதி துவங்கி வைக்கப்பட்டது.
இம்மையம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 13 மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது வரை கண்டறியப்பட்டு இம்மையத்தில் சேர்த்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்டோருக்கு இம்மையத்திலேயே தங்க வைக்கப்பட்டு மனநலம் சார்ந்த மருத்துவம், பொது மருத்துவம், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களுக்கான இணை நோய்கள் தொடர்பாகவும் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இப்பணிகளை மேற்கொள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒரு நிர்வாக அலுவலர், 2 செவிலியர்கள், 2 சமூக ஆர்வலர்கள், 2 மனநல சிறப்பு கவனிப்பாளர்கள் உள்ளிட்ட 13 பேர் 24 மணி நேரமும் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் இப்பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சுகாதாரத்துறையின் மூலம் மனநல மருத்துவர், ஆலோசகர், செவிலியர் மற்றும் சமூக நலப் பணியாளர் உள்ளிட்டோரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இம்மையத்தில் சேர்க்கப்பட்டவர்கள் அவர்களாகவே தங்களை பார்த்துக்கொள்ளும் வகையில் சீரடைந்த பின்னரோ அல்லது அவர்களின் உறவினர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தாலோ அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.