March 8, 2018
தண்டோரா குழு
ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் காஞ்சிபுரம் மாவட்டம் காலவாக்கம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கலை என்ற பாதையை கொண்டு முன்னேறியவன் நான். உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது. மாணவர்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும். அரசியலை பலர் கண்காணிக்க மறந்ததால் தான் இந்த நிலை உள்ளது. மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளேன். மாணவர் சமுதாயத்தோடு இணைந்து மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கல்லூரி பருவம் உற்சாகமானது தான் என்ற போதிலும், படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அப்துல் கலாம் கூறியதைப் போல் அனைவரும் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும், மக்கள் சேவையில் தான் தனது உயிர் பிரியும் என்றும் கமல் மாணவர்களிடையே பேசினார்.
மேலும், மக்களாட்சியை மகளிர் தான் மலர வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தை இளைஞர்கள் உதவியுடன் தான் முன்னேற்ற முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இளைஞர்கள் உதவியின்றி முன்னேற்றம் என்பது சாத்தியமாகாது என்று மாணவர்களிடம் கமல் தெரிவித்தார்.